நாளி – பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் ஆவணப்படம்

படம்

நாளி என்ற பழங்குடி சொல்லுக்கு ஓடை என்று பொருளாம்.

பழங்குடி இனங்கள் என்றால்…?

                தனக்கென தனித்த பொருளாதார-பண்பாட்டு வாழ்வை உடைய நிலையான மக்கள் சமூகம். இவர்களின் சொந்த நிலபரப்பு காடு, மலை மற்றும் இவை சார்ந்த இடங்கள். இப்படி சொந்த வாழ்வாதார பகுதியைக் கொண்ட மக்கள் சமூகத்தை குறிக்க முகவரி இருக்க வேண்டும். இந்த நாட்டவர், இந்த தேசத்தவர் எனப்பட வேண்டும். கேடுகெட்ட இந்திய முறைப்படி இந்த மாநிலத்தவர் என்றாவது சொல்லப்பட வேண்டும்.

                ஆனால் நாளியில் உள்ள பழங்குடி இனங்களை என்னவென்று சொல்ல வேண்டி இருக்கிறது – தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காடுகளில் வாழும் மக்கள் என சொல்கிறோம். ஏதோ வெளியில் இருந்து தஞ்சமடைய வந்தவர்களாக, அகதிகளாக, வந்தேறிகளாக, நமது நிலத்தை ஆக்கிரமிப்பவர்களாக பொருள்படும் வகையில் சொல்லப்படுவது என்ன ஞாயம்?

                இயற்கையைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து, இயற்கையாய் வாழும் இப்பழங்குடி இனங்களை நம்மைச் சார்ந்த ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கங்கள் அழித்து வருவதைத்தான் நாளி மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள் இரா.முருகவேள் மற்றும் இலட்சுமணன்.

                பழங்குடி இனங்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர் என்பது நாம் பெருமை பீற்றிக்கொள்கிற பேரரசுகள் காலம் தொட்டே நடப்பதை நாளி நமக்குச் சொல்கிறது. அது வெள்ளை ஏகாதிபத்தியத்தாலும் தொடரப்படுகிறது.

                இதன் உச்சமாக மிச்சமிருப்பவர்களையும் துடைத்தழிக்க இந்திய அதிகார வர்க்கமும், அதன் பொருளாதர அடியாள் படைகளும் கூடி நிற்கின்றன. இந்த கொலைகாரப் படைகள் கருணாமூர்த்திகளாக பார்க்கப்படுவதுதான் கொடுமை.

                இன்று காடுகளின் பாதுகாவலர்களாக, பல்லுயிர் தன்மையுள்ள பசுமை காடுகளுக்கு போராடுபவர்களாக, புலிகள் காப்பகத்தாராக காட்டிக்கொள்கிறார்கள் அல்லவா அவர்கள்தாம் பழங்குடி இனங்களை அழிக்கத் துடிக்கும் அய்ந்தாம் படையினர். இவர்களைக் கொண்டுதான் பழங்குடி இனங்களுக்கு சொந்தமான காடுகளில் தனது முற்று முழு அதிகாரத்தை நிறுவத்துடிக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.

                இவர்கள் காடுகளை கைப்பற்றி பொய்த்துப்போன மழையை மீண்டும் மண்ணுக்கு தரவாத் துடிக்கிறார்கள்? இல்லை, மழையை மீட்க வேண்டுமானால் நாம்தான் அரசிடம் இருந்தும், அதிகார வர்க்கத்திடம் இருந்தும் காடுகளை மீட்க வேண்டும். தேயிலைத் தோட்டங்களாக, யூக்கலிப்டஸ் மற்றும் தேக்குமரத் தோட்டங்களாக மாற்றப்பட்ட பொய்க்காடுகளை அழித்து உண்மையான காடுகளை உருவாக்க வேண்டும். காடு உருவாக்கும் கலையும், தொழில் அறிவும் கைவறப்பெற்ற பழங்குடி மக்களிடம் அவைகளை ஒப்படைக்க வேண்டும்.

                வேறு எதற்காக அதிகார வர்க்கம் காடுகளை கைப்பற்ற துடிக்கிறது? இதற்கு பின்னால் உலக பணக்கார தொழில் நிறுவன மாஃபியாக்கள் உள்ளனர். ஆம் இன்று உலகில் ”கார்பன் ட்ரேடிங்” என்ற உலகை முட்டாளாக்கும் வணிகம் ஒன்று நடைபெறுகிறது.

                அதாவது இன்றைய நவீன தொழில்நுட்ப ஆலைகள் அளவுக்கு அதிகமான நச்சுக்கழிவுகளையும், வெப்பத்தையும் வெளியேற்றுகின்றன. ஆதலால், புவி வெப்பமடைதல் தீவிரமாகிறது. பனிப்பாறைகள், ப‌னிமலைகள் உருகுவதும் அதனால் பல தீவுகளும், நாடுகளும் மூழ்குவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. இந்த நிலையை உலகில் விழிப்படைந்த மக்கள் சமூகங்கள் எதிர்க்கின்றன. குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளில் பலமான எதிர்ப்பு உள்ளது. இது ஏகாதிப்பத்திய எதிர்ப்பை உருவாக்கக்கூடியது.

                இதனை உணர்ந்த அய்ரோப்பிய நாடுகளின் தொழில் நிறுவனங்கள் தங்களால் வெளியேற்றப்படும் வெப்பத்தின் அளவை குறைத்துக் கொள்வதாகவும், அதற்கான மாற்று முறைகளையும், சில சீர்திருத்தங்களையும் செய்வதாக முன் வந்தன. ஆனால், அமெரிக்க நாடுகளின் நிறுவனங்கள் மட்டும் தங்களால் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாது என்றும், தங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை நிவர்த்தி செய்ய தங்களது நாட்டுக்கு வெளியே இயற்கையை பராமரிப்பதாகவும் காடுகளை உருவாக்குவதாகவும் கூறின.

                இப்போது ஏற்கனவே அதிக அளவில் காடுகளை உடைய நாடுகள், அதே நேரத்தில் அமெரிக்க அளவில் தொழில் நிறுவனங்களால் பூமியை மாசுப்படுத்தாத நாடுகள் அமெரிக்காவோடு பேரம் பேசத் தொடங்கின. நாங்கள் அதிக அளவில் காடுகளை வைத்துள்ளோம்; உங்கள் நாடு வெளியேற்றும் வெப்பத்தில் இருந்து இந்த உலகை பாதுகாப்பதில் பெருமளவில் பங்காற்றி வருகிறோம்; ஆகவே நீங்கள் ஏற்படுத்தும் இழப்புக்கானத் தொகையை எங்களிடம் உள்ள காடுகளின் அளவிற்கேற்ப எங்களுக்கு தரவேண்டும் என கோரின.

                இதை அமெரிக்க உள்ளிட்ட பெருந்தொழில் நிறுவன நாடுகள் ஏற்றுக்கொண்டு தரவும் செய்கின்றன. இதுதான் கார்பன் ட்ரேடிங் எனும் மாசுப்படுத்தலை நிவர்த்தி செய்தல் என்ற உலகை முட்டாளாக்கும் வணிகமாகும்.

                சரி, இப்படி காடுகளின் பேரால் கொள்ளையடிப்பவர்கள் ஏன் பழங்குடி இனங்களை காடுகளில் இருந்து வெளியேற்றத் துடிக்கிறார்கள்?

                காடுகளை பராமரிக்க பணம் தருகிற எசமானர்கள் காடுகளின் மீது படிப்படியாக தன் உரிமையை நிலைநாட்டத் துடிக்கிறார்கள். முதலில் காடுகளை நவீன சுற்றுலா இடங்களாக மாற்ற உத்தரவிடுகின்றார்கள். இது இத்துறையில் அவர்கள் மூலதனமிடவும், நினைத்த நேரத்தில் அவர்கள் இங்கு வந்து மகிழ்ச்சிக் கூத்தாடவும் தேவைப்படுகிறது. அவை எல்லாவற்றையும் விட காடுகள் பல கனிமங்களைக் கொண்ட செல்வக் களஞ்சியமாகும். அதை கண்டடையவும், கைப்பற்றவும் தடையாய் இருக்கிற பழங்குடி இனங்கள் வெளியேற்றப் படவேண்டுமென நிர்பந்திக்கிறார்கள்.

                ஆக உலகை மாசுப்படுத்தி நாசப்படுத்தும் அமெரிக்க முதலான எசமானர்களின் பாவம் நீக்கி பரிகாரம் காண இங்கு காடுகள் வளர்க்க‌வும், அவர்கள் கூத்தாடி மோட்சம் பெற காடுகளை உல்லாசபுரிகளாக மாற்றவும், ஒரு காலத்தில் தேயிலை, சவுக்கு, தேக்கு, யூக்லிப்டஸ் தோட்டங்களுக்காக காடுகளைக் கைப்பற்றியது போல் இப்போது அதன் அனைத்து வளங்களையும் அடைவதற்காக – அதாவது காடுகளுக்கும் அதன் சொந்த மக்களான பழங்குடி இனங்களுக்கும் இறுதி சமாதி கட்டுவதற்காக துடிக்கிறது அதிகார வர்க்கம்.

                நாளி – தன் ஒவ்வொரு நகர்விலும் மக்கள் எதிரிகளை நமக்கு அடையாளப்படுத்துகிறது. இரசாயனங்களைக் கொட்டி மண்புழுவையும், தவளையையும், வெட்டுக்கிளியையும் அழித்து கொசுக்களையும், நோய்க் கிருமிகளையும் பெருகச்செய்து மருத்துவக் கொள்ளைக்கு வழி கோலியவர்கள்; புற்றீசல் போல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பக் கோபுரங்கள் அமைத்து சிட்டுக்குருவி இனத்தையே அழித்தவர்கள்; காடுகளை தனியார் உடமையாக்கி மின் வேலியிட்டு வனவிலங்குகளை அழித்து வருகிறவர்கள்; நகரங்களை குப்பைமேடாக்கி கொண்டிருப்பவர்கள் எல்லாம் புலிகள் காப்பகம், பசுமை கானகம் என வேதாந்தம் பேசி காடுகளை அழிக்கத் துடிக்கும் கதையை நாளி நமக்கு புரிய வைக்கிறது.

                விவசாயத்தை வளர்த்தெடுப்பதாக இந்த வள்ளல்கள் செய்த கொடுமையினால் மண் கெட்டு விவசாயிகள் செத்து மடிவது தான் மிச்சம். இதே நிலைதான் நாளை காடுகளுக்கும் நடக்கும்.

                இதைத்தான் நாளி நமக்கு பாடமாக சொல்கிறது. பழங்குடி இனங்களைக் காப்பாற்றக் கோருகிறது. நாதியற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் கருணையல்ல இது. பழங்குடிகள் இப்பூமிப் பந்தின் பாதுகாவலர்கள். அவர்களின் தனித்த வாழ்வை, தனித்த சமூக அமைப்பை பாதுகாப்பதென்பது காடுகளையும், மலைகளையும் பாதுகாப்பதாகும். அதுவே இவ்வுலகையும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதுகாப்பதாகும்.

                நாளி நமக்கு பல பொருளாதார அடியாட்களை அடையாளப் படுத்துகிறது. இயற்கை பாதுகாவலர்கள் என வேடமிட்டுத் திரியும் ஏகாதிபத்திய கைக்கூலிகளை சுட்டிக்காட்டுகிறது.

                ஆகவே நாளி பார்ப்பதற்கல்ல – போராடுவதற்கு! 

– குணா

Posted in பகுக்கப்படாதது | 1 Comment

எது திராவிடம்? -தமிழேந்தி

எது திராவிடம்? -தமிழேந்தி

Image | Posted on by | Leave a comment

இடிந்தகரை குடியரசு

 

நமது காலத்தின் புகழ்மிக்க போராட்டங்களில் ஒன்றாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு உருவெடுத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மீனவர்களும், சுற்றுப்புற கிராமத்தின் விவசாயிகளும் பங்கேற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை “சிலரின் தூண்டுதலால்” ஏற்பட்ட சிறு போராட்டம் என சிறுமைப்படுத்த சிறுநரிகள் முயன்றாலும், அது சிறுமைபட்டுவிடாது. மக்கள் போராட்டத்தின் மகத்தான பக்கங்களில், அக்கடற்புரத்து மக்களின் வீரம் கலங்கரை விளக்கமாய் நிற்கபோகிறது. பொய்மையும், சூதும் இருளும் கவிழ்ந்த பிறகும் முற்றுகை தொடர்கிறது. முன்பு மக்கள் முற்றுகையிட்டனர். இப்பொழுது துப்பாக்கிகள்  மக்களை முற்றுகையிட்டுருக்கின்றன. பலப்பரிட்சை நீள்கின்றது. சுற்றி வளைப்பிற்கு உள்ளாக்குவதும், சுற்றிவளைப்பை உடைப்பதும், உடைப்பிலிருந்து வெளியேறி மக்கள் ஆளும் வர்க்கத்தை சுற்றி வளைப்பதும் என்பது ஸ்பார்ட்டகஸ் காலத்திய வரலாற்று தொடர்ச்சிதான், அன்று ரோமாபுரி இன்று முள்ளிவாய்க்கால், இடிந்தகரை, தண்டேவாடா என வரலாற்றின் ஏடுகளில் இடங்களும் ஆட்களும் தான் மாறிக்கொண்டேயிருக்கின்றன.  ஒரு சுற்றில் ஏற்படும் பின்னடைவு முழுமுதற் தோல்வி அல்ல, பின்னடைவிலிருந்து, முடுக்கத்திற்கான தருணத்தை கைப்பற்றும் ஒரு போராட்டத்தின் விசை. திசையறிந்து செல்லும். பட்டறிவிலிருந்து ஆர்த்தெழும் மக்கள் பேரலை. அதிகார தடத்தின் அடிச்சுவட்டையும் அடித்து செல்லும். இடிந்தகரை இன்று இதைத்தான் எதிர்நோக்கி யிருக்கின்றது.

 

அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் உதயகுமார் தோழர்களுடனான தனது உரையாடலில் குறிப்பிட்டதுபோல் இன்று இடிந்தகரையும் அதன் மக்களும், ஒரு தனி குடியரசின் மக்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய இரண்டு மாத காலமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற அப்பகுதி அறிவிக்கப்படாத விடுதலைப் பிரதேசமாகவே செயல்பட்டு வருகிறது. “பாடல்களிலும்” மலைகளிலும் வேறுபட்டு  விடுதலை பிரதேசத்தை தேடிக்கொண்டிருக்கும் நமது சகாக்களுக்கு மக்களின் முன்முயற்சிகளில் கத்துக்கொள்வதற்கு பல விசியங்கள் அங்கு காத்திருக்கின்றன.

 

மக்கள் திரளின் முன்முயற்சி

 

தொட்டறியத்தகும் பட்டறிவின் ஊடாக போராட்டத்தில் பங்குபெறும் மக்கள் போராட்டத்தை எவ்வாறு உறுதியோடு நடத்தி, செல்வார்கள் என்பதை இடிந்தகரை மக்கள் மீண்டும் ஒருமுறை வரலாற்றில் நிகழ்த்தியிருக் கிறார்கள். போராட்டக் குழுவிவினரையும்  உதயகுமாரையும், அழைத்து போராட்டத்தை தொடங்கிய நாளிலிருந்து மக்கள் ஒரு நிர்வாக முறையை கற்றிருக்கிறார்கள். பெண்களின் வேலைப்பிரிவினை அடுப்படியில் கிடப்பது என்பது மாறி, போராட்டத்தை தலைமை தாங்குவதும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதும், என மாறியுள்ளது. பல மாதங்களாக பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவளிப்பதற்கு தங்கள் கிராம பொருளாதாரத்தை முறைப்படுத்தியிருக் கிறார்கள். “வெளிநாட்டு பணம்” என நாராயண சாமி போன்ற வீணர்கள் வம்பளத்தபொழுது மக்களோ தங்கள் ஊர் கமிட்டியை முறைப் படுத்தி, தங்கள் சொந்த நிதியை வழங்கி போராட் டத்திற்கான பொருளாதாரத்தை கட்டமைத்திருக் கிறார்கள். பல மாதங்களுக்கு மேலாக தங்கள் வருவாய்க்கு ஆதாரமான மீன்பிடித் தொழிலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டாலும் அதையும் ஒரு முறைக்கு கொணர்ந்து தொழிலை நடத்தியிருக் கிறார்கள். அதேபோன்று, போராட்டத்திற்கு தகுந்த தருணத்தில் வடிவத்தை மாற்றுவது என்ற முயற்சியில் இளைஞர்கள்தான் மேற்கொண்டிருக் கிறார்கள். உண்ணாநிலை போராட்டம் தகுந்த நேரத்தில் அணு உலை முற்றுகையாக மாற்றப் பட்டு வீரியமடைந்ததற்கு முக்கிய காரணமாக இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி போராட்டம் வெறுமனே பயபீதி என்ற அடிப்படையில் அல்லாமல் அணு உலையின், அறிவியல், அரசியல் என பல தளங்களுக்கு விரிந்து சிறு குழந்தைகள் முதல் பெரியார் வரை அரசியல் பயிற்சியை பெற்றிருக் கிறார்கள். இந்த அரசும் ஆளும் வர்க்கமும் ஒரு மக்கள் போராட்டத்தை எவ்வாறு அணுகும் அதன் படிப்படியான வளர்ச்சி என்ன என்பதையும், தாங்கள் அதற்கு எவ்வாறு எதிர் வினையாற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் கத்தோலிக்க சபைதான் போராட்டத்தை இயக்குகிறது என்ற கட்டுக்கதைக்கு  மாறாக மக்கள்தான் போராட் டத்திற்கு ஆதரவாக சபையை நிர்பந்தித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை சபை போராட்டத்திற்கு எதிராக மாறியிருந்தால் உண்மையில் சபைக்குதான் பொருளாதார நெருக்கடியிலிருந்து பல நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும் என்பது மீனவ மக்களை தாண்டி வெளியே தெரியாத உண்மையாகும். ஆளும் காங்கிரஸ் கும்பல் சாதி மற்றும் மத பிளவுவாத முயற்சிகளுக்கு எதிராக மக்கள் உறுதியாக நின்றதோடு, 500 கோடி அன்பளிப்பு வழியாக மக்களை ஊழல் மயமாக்கி பிளவுபடுத்தும் முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டின் தற்போதைய ஊழல் மலிந்த ஓட்டு அரசியல் சூழலில் இடிந்தகரை மக்கள் முன்மாதிரியாக நின்றிருக் கிறார்கள். போர்க்குணம் மிக்க அம்மக்கள், தாங்கள் ஒன்று கூடும் திறனையே அடிப்படை யாக வைத்து போராட்டத்திற்கு இறங்கியிருக்கும் சூழலில், அவர்களிடையே. வன்முறையை ஏற்படுத்துவது, மோதலை தூண்டி பிளவுபடுத் துவது என்ற அரசின் முயற்சிகளைக்கூட பொறுமையாக  முறியடித்து, போராட்டத்தில் பக்குவம் பெற்றிருக்கிறார்கள். இதுமட்டுமின்றி போராட்டத்தை பாதுகாக்க எச்சரிக்கையுடன் விழிப்போடு இருப்பதும், அரசின் ஊடுருவல் காரர்களை தடுப்பதற்காக கிராமக்காவல் விழிப்பை ஏற்படுத்தியிருப்பதும், சிறுவர்கள் கூட கிராம காவலர்களை போல புதியவர்களை விசாரிப்பதும், கண்காணிப்பதும் என்பது மக்கள் போராட்டத்தில் பயின்றிருக்கிற உச்ச நிலை அரசியல் விழிப்பை வெளிப்படுத்துகின்றன. இறுதியாக ஜெ. அரசு 144 தடை உத்தரவோடு பல்லாயிரக்கணக்கான காவல்துறையோடு முற்றுகையை தொடங்கியதும், இடிந்தகரை மக்கள் எழுந்தார்கள். அஞ்சோம் அடிபணியோம் என்றார்கள். போராட்ட குழுவையும் பார்த்து சொன்னார்கள். பொறுமையாக நிற்போம் எதிர்கொள்வோம் என்றார்கள். 

Image

லியோ டால்ஸ்டாய் நெப்போலியனின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ரஷ்யர்களின் மக்கள் யுத்தத்தை கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்

 

 “மக்கள் யுத்தம் என்னும் குண்டாந்தடி

 

எல்லையற்ற சீற்றத்துடனும்

 

கம்பீரமான வலிமையுடனும்

 

எழுந்து நிற்கும்”

 

எழுந்து நின்றார்கள் இடிந்தகரை மக்கள். சாலைத் தடைகளையும் குழிகளையும் வெட்டி, கிராமத்தை சுற்றி பாதுகாப்பு வளைய மிட்டார்கள். முன்னேறிய முற்றுகையை பார்த்து சொன்னார்கள். நீ பேச்சுவார்த்தை நடத்திய போது நாங்கள் பேசினோம், நீ முன்னேறினால் எங்கள் வீரம் பேசட்டும் என்றார்கள். வீரம் விளைந்திருக்கும். ஆனால் பரமக்குடியிலே பட்டதுபோதும் என்று முற்றுகை சூரர்கள் பம்மாத்து காட்டினார்கள்.  முன்னேறினால் இழப்பு இரு பக்கமும் என்றதும், பாசிச ஜெ.வும் என்கவுண்டர் புகழ்களும், உணவுப்பொருள் தடை என்ற அழுகுணி ஆட்டத்தை தொடங்கினர்கள். மக்களோ, உணவு பொருள் முற்றுகையையும் உடைத்து கடல் தேசத்தன் ஊடாக, போராட்டத் திற்கான அடிப்படை வழங்கலை மேற்கொண்டார்கள். மாபெரும் மக்களின் முன்முயற்சி, போராட்டத்தின் உத்வேகம் இதுதான் இப்போராட்டத்தின் பெருமைமிகு வெற்றிகரமான அனுபவம். இவ்வனுபவம் சிறிதல்ல, ஒரு கிராம சமூகம் என்ற வகையில் நூற்றாண்டுகளில் அரிதாக நிகழும் இதுபோன்ற ஒருசில போராட்டங்களே சமூகத்தை பயிற்றுவிக்க முடியும். அரசையும் ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்த புரட்சிகர சனநாயக உணர்வை ஒரு மக்கள் திரள் பயின்று கொள்ள முடியும் என்பதை மிகச் சிறப்பாகவே  செய்து முடித்திருக்கிறார்கள் இடிந்தகரை மக்களும் போராட்ட சக்திகளும்.

 

போராட்டம் நீடித்து நின்றதற்கான சூழல்

 

ஏறக்குறைய போராட்டம் 200 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. பல ஏற்ற இறக்கங்கள், பேச்சுவார்த்தைகள் ஆய்வுக் குழுக்கள், இறுதியில் காவல்துறை முற்றுகை யோடு, முதற்கட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் போராட்டக்குழுவின் காலவரை யற்ற உண்ணாவிரதம் மக்கள் பிரதிநிதிகளோடு அரசின் பேச்சுவார்த்தைகள் என இரண்டாம் கட்ட போராட்டம் துவங்கியிருக்கிறது. அரையாண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்ற இதுபோன்ற ஒரு போராட்டம் தமிழக சூழலில் இன்று பொதுவழக்கில் இல்லாத ஒன்று. நகர்மயமும், நடுத்தர வர்க்கமும் பெருகிய சூழலில், கிராமப் புறங்களில் ஏற்படும் வேலைவாய்ப்பு நோக்கிய இடப்பெயர்வு நீடித்த போராட்டங்களுக்கு தடையாக இருக்கின்ற சூழலில், சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மற்றும் தனியர் துறையின் நாசகார வளர்ச்சி, தொழிற் திட்டங் களுக்கு எதிராக, சொந்த கிராமத்தையும், மண்ணையும் காப்பது என்ற போராட்டம் ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங் களைவிட தமிழகத்தில் அரிதாக உள்ள சூழலில், இடிந்த கரை மக்கள் போராட்டம் நீடித்ததற்கான சிறப்பு தன்மையை புரிந்து கொள்வது அவசியமானதாக இருக்கிறது. இதை சிலர், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்றும், வேறு சிலர் தமிழ் தேசத்தை காக்கும் போராட்டம் என்றும், இன்னும் சிலர்  சூழலியல் போராட்டம் என்றும் மீனவர்களின் போராட்டம் என்றும் பல வகை அரசியல் அடையாளங்களை அவரவர் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அதை அடையாளப்படுத்துவதும், அதிலிருந்து மட்டும் இப்போராட்டத்தின் சிறப்பு வகை தன்மையை புரிந்துகொள்ள முயற்சிப்பதும் சாத்தியமற்றதாகும்.

 

பெரும் மக்கள் தொகை கொண்ட மீனவ கிராமங்கள், விரல்விட்டு எண்ணத்தக்க சுற்றுப்புற விவசாய கிராம மக்களின் ஆதரவு, தொடர்ச் சியாக, கிராமங்களுக்கிடையேயும் காவல் துறையுடனும் மோதலில்  ஈடுபடும் போர்க்குண மிக்க மக்களின் அனுபவம், மீனவ மக்களின் கட்டுக்கோப்பான கிராம நிர்வாக அமைப்பு, (மாதா கோவில் மணி அடித்தால் ஊர் கூடும் என்ற நிலை), அணு உலை அமைந்துள்ள கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மாறியது என்பதோடு, உலகில் இன்று மிக தீவிர போராட்டங்கள் நடைபெறுகின்ற பகுதிகளை யொத்த அரசு உள் நுழையாத (ஷிtணீtமீறீமீss) நிலைமையை ஒப்பீட்டளவில் வேறு மாதிரி இங்கும் பொருத்தி பார்க்க முடியும். ஏனெனில் நடைமுறையில் கிராம நிர்வாகத்தை பொருத்தவரை அரசின் பாத்திரத்தை ஏற்று, மக்களின் பண்பாட்டு வாழ்வியலோடு இணைந்த கத்தோலிக்க சபை. அரசற்ற நுண் அரசாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறான நிலைமை மக்கள் தங்கள் சுய நிர்ணயத்தோடு முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இருப்பதோடு மட்டு மல்லாமல், அரசு வேகமாக உள்நுழைந்த முடிவுகளை எடுப்பதற்கு தடையாகவும் உள்ள சிறப்பான சூழல் இப்போராட்டம் நீடிப்பதற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக இருக்கிறது.

Image

அடுத்ததாக போராட்டத்திற்கு தலைமை தாங்க உதயகுமார் உள்ளிட்ட போராட்ட குழுவினரை மக்கள் தாங்களே வரவேற்று அமைத்ததும், அணு உலை அழிவு குறித்து புகுசிமா வழியாக மக்கள் தொட்டறியத்தக்க அனுபவத்தை பெற்றதும்கூட போராட்டம் நீடிப்பதற்கான முக்கிய அம்சமாக இருக்கிறது.

 

இறுதியாக பொதுவில் இன்றைய உலகமய சூழலில், மக்களினங்கள் மீது நடைபெற்றுவரும் இயற்கை பொருளாதார வள சூரையாடல், ஆங்காங்கே எதிர்ப்பு போராட்டங்களை தன்னியல்பாக தூண்டி வருகிறது. இந்த பொது போக்கின் ஒரு பகுதியாக சுற்றுசூழலியல் மற்றும் இன்ன பிற வடிவங்களில் மக்கள் விழிப்புணர்வு பெற்று போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இடிந்தகரை மக்களும் பொதுப்போக்கின் பகுதியாக தங்களை இணைத்துகொள்ளும் விழிப்புணர்வை பெற்று வருகிறார்கள் என்பதை புரிந்துகொள்வதும் அவசியமானதாகும்.

 

போராட்டவடிவம், மற்றும் வழிமுறை

 

போராட்ட வடிவம் குறித்து பலருக்கு பல விதமான ஐயங்களும், விமர்சனங்களும் சந்தேகங்களும் இருந்து வருகின்றன. போராட் டத்தின் நீடித்த வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உத்திரவாதப்படுத்தும் போராட்ட வடிவங்கள் என்ன என்பது பற்றி பலவாறாக விவாதிக்கப் பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் 200 நாட்களாக நீடிக்கின்ற போராட்டத்தில், உண்ணாவிரதம், முற்றுகை என்ற முதன்மையான வடிவங்களோடு பல போராட்ட வடிவங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் மற்றும் போராட்ட குழுவின் உணர்வு மட்டத்தை தாண்டி, அரசின் போராட்டம் குறித்த அணுகல் போக்கே போராட்டத்தின் வடிவத்தை தொடர்ந்து தீர்மானித்து வருகின்றன. மார்ச் 19 ம் தேதிக்கு முன்னாள் வரை  மாநில அரசின் அணுகுமுறையும் மைய அரசின் அணுகுமுறையும் தங்களுக்குள் முரண்பாடுடையதாகவும் அது போராட்டத்திற்கு சாதகமானதாகவும் இருந்து, ஆளும் வர்க்க மற்றும் அரசுகளுக்கு இடை யிலான முரண்பாட்டை எவ்வளவு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியுமோ, அந்தளவிற்கு அது நமக்கு சாதகமாக இருந்தது. ஆனால் மீண்டும் அவர்களுக்கிடையே இணக்கமும், பிரச்சனை குறித்த ஒரே கொள்கை அணுகு முறையும் எந்த அளவிற்கு போராட்டத்திற்கு பாதகமாக அமையமுடியுமோ அந்தளவிற்கு நமக்கு பாதகமாக மாறியிருக்கிறது. ஆனால் ஒரு போராட்டம் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான முரண்பாட்டில் மையமாக தங்கியிருக்க முடியாது. தற்போதைய மையப்படுத்தப்பட்ட அரசு எந்திரம் நவீன மயமான சூழலில் ஒரு பகுதி போராட்டம், விரிவடையாமல் நீண்ட காலம் தாக்குபிடித்திருப்பது, கடினமானதாகும. பரந்தபட்ட மக்கள் ஆதரவாக அணிதிரட்ட படுவதுதான் கூடுதல் வலிமையை பெருக்கு வதற்கும், போராட்டம் வடிவம் மற்றும் திறனை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும். ஜெ. அரசு போன்ற ஆளும் வர்க்கங்களின் துரோகத்திற்காக வரலாற்றில் மக்கள் போராட்டங்கள் எப்பொழு துமே காத்திருக்கின்றன. அதை எதிர்கொள்வதற்கு சிறந்த வழி அவர்களை பற்றிய நம்முடைய சொந்த மதிப்பீட்டிலிருந்து நம்மை தயார்படுத்தி வைத்திருப்பதுதான். சிலர் குறிப்பிடுவதை போல, வன்முறை மற்றும் வன்முறையற்ற அல்லது சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத போராட்ட வடிவங்கள் குறித்த கருத்தை சூத்திரம் போல தயாரித்து கையளிப்பதல்ல நமது வேலை, சிக்கலான போராட்ட வளர்ச்சிப் போக்கில் விரிவான அனுபவத்தை பெறுவதே அவசியமான தாகும். ஏனெனில் இப்போராட்டத்திலும் கூட எல்லா வடிவங்களும் பயன்படுத்தப்பட்டிருக் கின்றன. சிலர் குறிப்பிடுவதுபோல, மென்முறை மற்றும் சட்டபூர்வ போராட்ட வடிவங்கள்தான் கடைபிடிக்க பெற்றிருக்கின்றன என்பது உண்மையல்ல. மக்களின் சட்டமீறிய முற்றுகை போராட்டங்கள்தான் போராட்டம் தீவிரம் பெற்றதற்கான காரணம், இரண்டாவது, 19ந் தேதி வரையும் அதன் பின்னரும் நடைபெற்ற மக்களின் சாத்வீக உண்ணாவிரதத்தை பாதுகாத்தது. அரசின் வன்முறையை எதிர்கொள்ள தயாராக நின்ற மக்களின் நீதிமிக்க எதிர்வன்முறைக் கான தயாரிப்புதான் என்பதை மறுக்க வியலாது. இன்னும் சிலர் உபதேசிப்பதை போல இந்த மென்முறையாளர்கள்தான் போராட்டம் வெற்றி பெறாததற்கு காரணம் தங்கள் கையில் இந்த போராட்டம் வன்முறை வடிவில் வழிநடத்தப் பட்டிருந்தால் வெற்றிபெற்றிருக்கும் என்பது, நகைச்சுவையான கற்பனையாகும். அடையாளப் போராட்டங்களுக்கு மட்டுமே ஊழியர் பலமுள்ள இயக்கங்கள் என்ற இன்றைய தமிழ்நாட்டின் பொதுபோக்கில் இது வாய் சவடாலன்றி வேறல்ல. வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்கள் ஒன்றையொன்று பின் தொடர்வதாகவும், ஒன்றையொன்று வளர்ச்சி நோக்கில் பாதுகாப்பதாகவும் இருக்கின்றன. இந்த எதிர்மறைகளுக்கிடையே கற்பதும், தகுந்த தருணத்தில் கடைபிடிப்பதும் அவசியமான தாகும். ஏதோ ஒன்றை மறுப்பது வளர்ச்சி நிலைமைகளை கவனிக்காமல் கண்ணை மூடிக்கொள்வதாகும். மையப்படுத்தப்பட்ட நவீன அரசு ஜ் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நீடிக்கின்ற போராட்டம், அமைப்பு – ஊழியர் பலவீனம் ஜ் மக்கள் போராட்டத்தின் தன்னியல் பான வளர்ச்சி, என்ற நேர் எதிர்மறை சாதக, பாதகங்களோடு பயணிக்கின்ற, இப்போராட் டத்தை இவ்வளவு நீண்டு தாக்குபிடித்துகொண்டு செல்வதே ஒரு பலம் என்ற அடிப்படையில் சிந்திப்பதும், இப்போராட்டத்தை இந்நிலையி லிருந்து உடைத்து முன்னேறிச் செல்வதும் அவசியமானதாகும். முதற்கட்டத்தில் உண்ணா விரதம் முற்றுகையாக மாறி பின்னர் உண்ணாவிரதத்திற்கு தள்ளப்பட்டு முற்றுகை யிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து உடைத்து கொண்டு முன்னேறி, இன்னும் பரந்த அளவிலான ஆதரவோடு முற்றுகையிடுவதற்கான தயாரிப்பை மேற்கொள் வதே இன்று நம்முன் உள்ள பணியாகும். அது அரசு அணு உலையை திறந்தாலும் கூட தளராமல் தொடர வேண்டிய ஒன்றாகும்.

 

அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், போராட்டமும்

 

அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கியதிலிருந்து, கூடங்குளத்திற்கு வெளியே சிறுசிறு இயக்கங்கள் ஆதரவு போராட்டம் இயக்கங்களை கட்டியமைக்கத் தொடங்கின. பின்னர், சமூக வலைத்தளங்கள் தொடங்கி, பெரிய அரசியல் கட்சிகள்வரை ஆதரவு போராட்டங்களை நடத்தத் தொடங்கின. அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் அரசியல் ஆதரவை உண்டாக்குவது அதனுடைய முதன்மை பணியாக, இருந்த பொழுதும் அதில் பெரிய அளவிலான ஆதரவை உண்டாக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. இதிலே இரண்டு வகை போக்குகள் இருந்தன. முதலாவது தன்னுடைய பணியாக ஒரு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வித்தில் போராட்டங்கள் நடத்தினால் போதும் என்பதும், இரண்டாவது, போராட்ட சக்தி களோடு, இணைத்து செயலூக்கமாக வெளியே யும் உள்ளேயும் மக்களை திரட்டுவதற்கு பணியாற்றுவது என்பதுமான கருத்தை கொண்டிருந்தன. ஆனால் இந்த இரண்டு வகையிலுமே கூட செயலாற்றுவதற்கு அமைப்புகளினுடைய அகநிலை தயாரிப்புகள் பலவீனமாகத்தான் இருந்தன. ஒன்று, கட்டமைப்பு, ஊழியர் பலவீனம், மற்றொன்று, இவ் எதிர்ப்பு போராட்டத்திற்கு  ஆதரவாக தனது சொந்த நடைமுறை அரசியல் திட்டமின்றி, போராட்டத்தின் ஏற்ற இறக்கத் திற்கு ஏற்ப, தன்னெழுச்சியாக செயல்படுவதையே தனது இயல்பாக கொண்டிருந்தன. இன்னொன்று இடிந்தகரையை மையம் கொண்ட போராட்ட சக்திகளோடு பரஸ்பரம் புரிதல் ஏற்படுத்தி கொண்டு செயல்படுவதற்கு இருபக்கமும், இப்போராட்ட அடிப்படையில் அல்லாமல் அரசியல் மதிப்பீடுகள் சார்ந்து தேவையற்ற புரிதலே நிலவியது போராட்ட முன் முயற்சி களுக்கு சிக்கலானதாக இருந்தது. பெரிய அரசியல் கட்சிகளான ப.ம.க ம.திமு.க வி.சி, நாம்  தமிழர், போன்றவை தனிநபர்களாக அதன் தலைவர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அளவிற்கு, அவர்களின் கட்சி அணிகளை, இப்போராட்ட கோரிக்கைக்கு ஆதரவாக இறக்கவில்லை. அது மட்டுமின்றி அரசின் தீவிரமான எதிர்பிரச்சார சூழல் நிலவிய போதும் அணு உலை எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டின் சில முக்கிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரல் என்பதை கூட அவர்கள் கொண்டு போய் சேர்க்காததால், அணு உலை எதிர்ப்பு என்பது இடிந்தகரை மக்களின் கோரிக்கையாக சுருங்கிப்போன ஒரு விபரீத தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அடையாள போராட்ட அரசியல் கம்பெனியாக  மாறியது எவ்வாறு ஈழத்தை கைவிட்டதோ அது இன்று இடிந்தகரை மக்களையும் கை விட்டுள்ளது. நெப்போலியன் போனபார்ட்டுக்கு எதிராக பாரிஸ் நகரம், போராடியபோது பிரெஞ்சு தேசம் எப்படி கைவிட்டு வேடிக்கை  பார்த்ததோ அதே போன்று இன்று இடிந்கரை போராடி கொண்டிருக்கும் பொழுது ஒட்டு மொத்த தமிழ்தேசமும் கைவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. மூவர் தூக்கு, ஜெனிவா தீர்மான வெற்றி போன்றவை ஏற்படுத்தக்கூடிய தோற்ற மயக்கத்தை இப்போராட்டத்தின் பின்னடைவு மக்கள் இயக்கங்களின் பலவீனத்தை மீண்டும் வெளிக் கொணர்ந்துள்ளது . உண்மையான அரசு எதிர்ப்ப போராட்டங்கள்  அடையாளமாக நடத்திவிட முடியாது என்பதும், அமைப்பு வலுவின்றி பெருந்திரள் மக்கள் போராட்டத்தைக்கூட வெற்றிக்கு கொண்டு செல்ல முடியாது என்பதும் உணர வேண்டிய பாடமாகும்.  கடல் எங்களை பிரிக்கிறது, இல்லையென்றால், ஈழம் செல்வோம் வெல்வோம் என்றவர்கள் எல்லோரையும் இன்று கடல் பிரிக்கவில்லை அரசின் கொள்கையும், பயங்கரவாதமும்தான் பிரித்து வைத்திருக்கிறது. ஆகவே மக்கள் போராட்டங்களில் ஆளும் வர்க்க கட்சிகளோடு கூட கோரிக்கையின்  அடிப் படையில் அவர்களை மக்கள் போராட்டங் களுக்கு நிர்பந்திக்கின்ற வகையில் இணைத்து செயல்படுவதும், ஆனால் முதன்மையாக ஊழியர்  அமைப்பு பலத்தை பெருக்கி, அதனடிப்படையில் மக்கள் திரள் போராட்டங்களை வழிநடத்துவது என்ற கருத்தின் மீது சார்ந்திருப்பதும் என்பதே ஈழப்போராட்டம் தொடங்கி, இடிந்தகரை வரை இன்று நமக்கு உணர்த்தியுள்ள பாடமாகும்

.Image

அடையாள அரசியல்

 

அடையாள அரசியல் இன்று பலவித வண்ணங்களை பூசிக்கொண்டு வருகிறது. அது நன்கு செயல்படக்கூடிய தோழர்களைக்கூட வெறும் தோன்றுவதை எழுதுபவர்களாக மாற்றி வருகிறது. அதுவும் போராட்டங்கள் பின்ன டைவுக்குள்ளாகும்பொழுது, அதிலிருந்து கற்று கொள்வதற்கு கவனம் செலுத்துவதற்கு மாறாக, எளிமையாக தீர்வுகளை கண்டடைய முயற்சிக் கிறது. இணைய தளங்களும், சமூக வலைத்தளங் களும், பரவலான சூழலில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர்வு மாத்திரைகள் வழங்கப் படுகிறது. அடையாள அரசியலின் உடனடி சிக்கலாக மக்களை பிளவுபடுத்தும் பிளவு வாதமே வெளிப்படுகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டத்திலும்கூட, இன்று நடைமுறை அளவிலும் கருத்தளவிலும் பிளவுவாதம் மெல்ல தலைதூக்க முயற்சிக்கிறது. இக்கருத்து அனைவ ரிடமும் ஒரே மாதிரி வெளிப்படுவதில்லை. இது ஒவ்வொருவரிடமும் அவர் சார்ந்த சூழலில் வெளிப்படுகிறது. தன் அடையாளமும் அது சார்ந்த அரசியலும் தனக்கு நேர்மையாக இருக்கலாம் ஆனால் போராட்டத்திற்கு எவ்வாறு பயன்பட போகிறது என்ற எவ்வித அக்கறையும் இல்லாமல் வெளிப்படுகிறது. மீனவர்களின் போராட்டம் என்று சொல்லி போராட்ட தலைமையை சிதைப்பதன் மூலம் பிற ஆதரவு திரட்சியை பிளவுபடுத்துவதும், அணு உலை எதிர்ப்பு சூழலியல் போராட்டம், அரசியல் எனக்கு பிடிக்காது என சொல்லி அமைப்பு அரசியல் மறுப்பை மேற்கொண்டு மக்களை நிராயுதபாணியாக்குவதும், தமிழ்தேசிய, இடது சாரி, முற்போக்கு ஆற்றல்களை போராட் டங்களுக்குள் நுழைவதை அபாயகரமானதாக சித்தரித்து, மக்களை அரசியல் நீக்கம் செய்ய முயற்சிப்பதும் நீடித்த அமைப்பு அரசியல் திட்டமின்றி, தனித்தனி தொண்டு நிறுவன புராஜெக்ட்டுகளைப் போல இப்போராட்டத்தை யும் அணுகி, விளம்பர உத்திமூலம் பரபரப்பை கூட்டுவதும், என்று பல வகையில் இப்போராட் டத்திலும்  அடையாள அரசியலானது. திரண்டு வருகிற ஆதரவு சக்திகளை புரட்சிகர சனநாயக அரசியல் பின்னே அணிதிரள்வதை தடுப்பதிலும் பிளவுவாதத்தை தூண்டுவதுமான பங்கை ஆற்றி வருகின்றது.

 

போலி இடதுசாரிகளும், தூய அறிவியலாளர்களும்

 

பெரியார், குறிப்பிட்டதை போன்று இந்தியாவில் கம்யூனிசம் தோன்ற வேண்டு மென்றால், இந்த “அதிகாரபூர்வ கம்யூனிஸ்டு” கட்சிகளை ஒழிக்காமல் நடக்காது போலும். எந்த வொரு ஆளும் வர்க்கத்தின் கொள்கையையும் திட்டங்களையும் முதலில் ஆதரித்து கருத்தை உருவாக்குகின்ற சக்திகளாக இவர்களே செயல்பட்டு வருகிறார்கள். ஈழப்போராட்டத்தின் போது, சிறிய நாடுகள் பிரிந்தால் ஏகாதிபத் தியங்கள் நுழைந்துவிடுவார்கள், என்ற பூச்சாண்டி கருத்தை கூறி ஈழ மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை, மறுத்த சி.பி.எம் கட்சி தெற்காசிய நாடுகள் விவகாரத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டை தனது கொள்கை யாக கொண்டுள்ளதோடு, உலகமயமாக்கல்   கொள்கையை மேற்குவங்கத்தில் நடைமுறைப் படுத்தியது. பழங்குடி, மற்றும் தேசிய இன பேராட்டகளுக்கு எதிராக நிற்பது என எல்லா வகையிலும், பிஜேபி, காங்கிரசின் கொள்கையை தனது கொள்கையாக கொண்டு பெயரில் மட்டும் கம்யூனிசத்தை கொண்டுள்ளது. சிபிஐ கட்சியோ, மக்கள்போராட்டங்களோடு தன்னை அடை யாளப்படுத்தி கொள்வதற்காகவும், கட்சிக்குள்ளே வரும் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காகவும் போராட்ட ஆதரவு நிலைபாடு எடுத்தாலும், கொள்கையளவில் சிபிஎம் போன்றேதான் அதன் கருத்துக்களும் இருந்துவருகின்றன. புதிதாக சில மா.லெ குழுக்களும் இவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 1998ல் பிஜேபி பொக்ரான அணுகுண்டு வெடித்தபொழுது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குண்டு என வெட்கமே இல்லாமல் இந்துத்துவவாதிகளை போல நிலைப்பாடு எடுத்தவர்கள்தான் இவர்கள். இன்று அணு உலை, வளர்ச்சி,  தொழிற்நுட்பம், ரஷ்ய பாதுகாப்பு என பல கதைகளை கூறுகிறார்கள். தா. பாண்டியன் நாராயணசாமிக்கெல்லாம் அப்பனாக கூடங்குளம் மக்கள் பணத்தை வாங்கிகொண்டு வெளியேற வேண்டுமென்கிறார். இந்திய தேசியவாதமும், பாராளுமன்றவாதமும் சேர்ந்து இவர்களின் சிவப்பு கரைந்து காவியாக மாற்றி பன்றித்தொழுவத்தில் நிறுத்தியிருக்கிறது.

 

மேற்படி, போலி கம்யூனிஸ்டுகளின் அறிவு ஜீவிகள் சிலரும், பகுத்தறிவுவாதிகள் பலரும் இரசுகின்ற தூய அறிவியல்  என்ற ஒரு கொள்கை மேற்படிகளைவிட ஆபத்தானதாக இருக்கிறது. இவர்களுக்கு அணு உலை வர்த்தகத்தில் அரசியலே கிடையது, தூய மின்சாரமும் நல்ல சுற்றுப்புற சூழலும் கிடைக்கும், வளர்கின்ற தொழில்நுட்பத்தில் ஆபத்துகள் நீங்கிவிடும் என அறிவியலை  கடவுளாக்குகின்ற, நடைமுறையில் ஏற்படுகின்ற மனித அழிவுகளை பற்றி கவலைப் படாத அணு உலை வர்த்தக நலனை பற்றிய அறியாத இவர்கள்தான், அக்கட்சிகளின அதிகாரப்பூர்வ அறிவியல் ஆலோசகர்களாக இருக்கிறார்கள்.

 

இன்னொரு தூய அறிவியல் கோஷ்டி ஒன்று உள்ளது. அவர்கள்தான் அரசு வல்லுநர் குழுக்களில் இடம்பெற தகுதிவாய்ந்த சீனிவாசன் களும் அப்துல்கலாம்களும், மேலே இருக்கிற கோஷ்டி அறிவியலுக்காக மாறடிக்கிறதென்றால், இவர்கள் பணத்திற்காகவும் அதிகார அந்தஸ்திற் காகவும் மாறடிக்கிறவர்கள். இவர்கள் தொழில் நுட்ப வல்லுநர்களாக மட்டும் இருப்ப தோடில்லாமல், அதிகார மையங்களாக, அரசின் கேந்திர துறைகளில் முடிவை தீர்மானிக்கின்ற, ஆளும் கும்பலின் பகுதியாக இருக்கிறார்கள். இவர்கள்தான் இன்று, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போன அரசியல்வாதிகளுக்கு மாற்றாக, சிறந்த முன் மாதிரிகளாக மக்களை ஏமாற்றுவதற்காக முன்நிறுத்தப்படுகிறார்கள்.

Image

ஆதரவு- எதிர்ப்பு

 

அணு உலை எதிர்ப்பு அரசியல் என்பது இன்று உலகம் முழுவதும் ஒரு சனநாயக கோரிக்கையாக மக்களின் வாழ்நிலை கோரிக்கை யாக மாறியுள்ள சூழலில், இங்கு அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான மக்களின் பயபீதியில் இருந்து எழுப்பப்பட்ட கோரிக்கை என விநோதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அணு உலை போன்ற நாசகார வளர்ச்சி திட்டங்கள் எங்கள் பகுதிக்கு வேண்டாம், அது போன்ற திட்டங் களை எங்கள் பகுதியில் மேற்கொள்வதற்கு பகுதி மக்களோடு அரசு இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்ற  மக்களின் சனநாயக கோரிக்கை யை புறந்தள்ளிவிட்டு அச்சத்தை போக்குவது என்ற ஒரு தொழில்நுட்ப கோரிக்கையாகவே, அரசும், ஆளும் வர்க்கமும் சுருக்க முயற்சிக்கிறது. சனநாயக உணர்வற்ற பார்ப்பனிய மனோபாவம் கொண்ட நமது சமூக அமைப்பும், பொதுக் கருத்தும், அவர்கள் அழிந்தாலும் பரவாயில்லை தங்களுக்கு அணு உலை திறக்கப்பட வேண்டும், மின்சாரம் வேண்டும் என கோருகிறது. உலகமயமாக்கலின் நாசகர வளர்ச்சி மாதிரிகளை ஆதரிப்பவர்கள், இந்துத்துவவாதிகள், தூய அறிவியலாளர்கள், சுய நலமிக்க சனநாயக உணர்வற்ற பார்ப்பனிய மனோபாவம் கொண்ட மக்களின் பொதுக்கருத்து  ஆகியவை இணைந்த கூட்டுதான், மக்கள் போராட்டத்திற்கு எதிரா கவும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேச துரோகிகள் என்ற ஆளும் வர்க்கத்தின் கருத்திற்கு ஆதரவான சமூக அடித்தளங்களாகவும் இருந்து வருகின்றன. இதற்கு எதிரான ஒரு கருத்தியல் போராட்டத்தை நடத்தாமல் நாம் ஒரு அடிகூட முன்னேற முடியாது.

 

பேராட்டத்திற்கான ஆதரவை பொறுத்த வரை, பாதிக்கப்படும் பகுதி மக்கள், சூழலியர்கள், மாற்று அரசியலை முன்வைக்கின்ற அரசியல் இயக்கங்கள், அணு உலையை எதிர்க்கின்ற ஆளும் வர்க்க கட்சிகளின் ஒரு பிரிவினர் என்ற பரவலான  சக்திகள் இருந்தபொழுதும், இவர் களுக்கிடையே கோரிக்கையின் அடிப்படை யிலான கூட்டும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிற் கான திட்டமும் இல்லாததால், இருக்கின்ற ஆற்றலைகூட, பயன்படுத்த முடியாத வகையில்  இருப்பதுதான் எதிர்ப்பு பேராட்டத்தின் பலவீனமாக உள்ளது.

 

போராட்டக்குழு

 

 காந்திய கருத்துடையவர்கள், தமிழ்தேசிய கருத்துடையவர்கள், மார்க்சிய கருத்துடையவர்கள், தன்னார்வ நிறுவனங்கள், கத்தோலிக்க சபை உறுப்பினர்கள், என பலவிதமான கருத்துக்களை கொண்டவர்களின் கூட்டுத் தொகுப்பாக போராட்டக்குழு அமைந்துள்ளது.

 

அதனுடைய பலமான அம்சங்களாக: அரையாண்டுகளுக்கு மேலாக போராட்டத்தை தாக்குபிடித்து நடத்தியது. மாறுபட்ட கருத்தியல் பின்னணி உடையவர்கள் ஒன்றிணைந்து பெரிய சிக்கல் எதுவுமின்றி போராட்டத்தை வழிநடத்தியது. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான இப்போராட்டத்தின் ஏற்ற இறக்கங்களின் மூலம் மக்களுக்கு அரசியல் பயிற்சியையும், புரட்சிகர சனநாயக உணர்வையும் வளர்த்தது என பல விசயங்களை குறிப்பிடலாம்.

 

பலவீனமான அம்சங்களாக:  மாநில அரசை குறித்து நன்நம்பிக்கையுடன் குறை மதிப்பீடு செய்தது. இரண்டாம் மட்ட தலைமை என் றெல்லாம் தனக்குள் பிரமையை ஏற்படுத்திக் கொண்டு இறுதி நேரத்தில் அடக்குமுறையை எதிர்கொள்ள  மக்களை திரட்ட தயாரிப்பின்றி இருந்தது பிற பரந்துபட்ட ஆதரவு அரசியல் சக்திகளை திரட்ட, போதுமான நேரடி முன்முயற்சி எடுக்காமல் இருப்பது, போராட்டத் தின் அடுத்தடுத்த கட்டங்களை குறித்து, அரசியல் அமைப்பு பார்வை இல்லாததால் தன்னியல்பாக முடிவெடுப்பது, போராட்டக்குழுவின் தன்மை யினால் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட புரட்சிகர தமிழ் தேசிய அரசியல் பண்பை பெறாமல் போனது.

 

என பல சாதக பாதக அம்சங்களை கொண்டு இயங்கும் போராட்டக்குழு மேலும் ஆரோக்கிய மாக பல விசயங்களை பரிசீலித்தால் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்தி இருக்க முடியும். இனிமேலும் வழிநடத்த முடியும்.

 

நக்சல் பீதி:

 

பல பொய்பரப்பல் பிரச்சாரங்கள் எடுபடாத நிலையில், அரசு இறுதியில் நக்சல் ஊடுருவல் எனற ஆயுதத்தை கையில் எடுத்தது. தோழர் சதீஷ் மீதுள்ள பொடா வழக்கை மையமாக வைத்து, தோழர்கள், வன்னியரசையும், முகிலனையும் இணைத்து, ஒரு கதையை கட்டி போராட்டத்தை நசுக்கலாம் என உளவுத்துறை ஆலோசனையோடு உள்ளூர் காவல்துறை களமிறங்கியது. ஆனால் மக்கள் பேரணியில் தோழர்கள் கைது செய்யப்பட்டு எதிர்ப்பு உண்டானதால் அந்த கதை சில நாட்களிலேயே எடுபடாமல் போனது. இருந்தபோதிலும், நக்சல்பாரி இயக்க கருத்துடையவர், விடுதலைப்புலி ஆதரவாளர் என்பதாலேயே ஒரு போராட்டத்தில் பங்குபெற முடியாது போகுமானால், எதிர்காலத்திலும் போராட்டங்களுக்கு எதிராக அரசால் இந்த உத்தி திரும்ப திரும்ப பயன்படுத்தபடும்பொழுது நாம் நிராயுதபாணியாக நிற்போம். எனவே இதுபோன்ற கருத்தியல் தடைகளையும் போராட்டத்தின் போக்கில் எதிர்கொண்டு முறியடிக்க முன் தயாரிப்போடு நாம் இருக்க வேண்டும்.

 

அரசின் கொள்கையும் நமது  பார்வையும்

 

உலகமயமாக்கலின் வளர்ச்சி மாதிரியை பின்பற்றி, இந்திய மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் நலனுக்காக, இந்திய அரசு ஒரு கொடூரமான வளர்ச்சி மாதிரியை அமுல்படுத்தி வருகிறது. அது காடுகளிலிருநது பழங்குடி களையும், கடல்களிலிருந்து மீனவர்களையும், நிலங்களிலிருந்து விவசாயிகளையும் விரட்டு கின்றது. பழங்குடிகள் மற்றும் தேசிய இனங்களின் வளங்களை சூரையாடுவதற்காக இந்திய அரசு பல பகுதிகளில் மறைமுக போரையே நடத்திவரு கிறது. அதன் ஒரு பகுதிதான் கூடங்குளத்தில் நடைபெற்று வருவதும். இதை செயல்படுத்து வதில் முதன்மை ஆளும் வர்க்க கட்சிகள் அனைத்தும் ஒத்த கருத்தொருமிப்பையே கொண் டுள்ளன. முதலில் மின்சார வேக கருத்தியல் பொய்களை மக்கள் மத்தியில் உருவாக்குவதும், பின்னர் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதையும் செய்துவருகிறார்கள். இந்திய ஆளும் வர்க்கம் அணு ஆயுத பெருக்கத்திற்காக முயற்சித்தாலும், இன்று அணு உலை விரிவாக்கம் முதன்மையாக மின்னாற்றல் சந்தை விரிவாக்கத்திற்கே  பயன் படுத்தப்படவிருக்கிறது. ஏகாதிபத்தியங்களை பொருத்த வரை அணு உலையை விற்பதற்கு இந்திய  ஒரு பெரிய வர்த்தக சந்தை, இந்திய பெரு முதலாளிகளுக்கோ தங்களின் நாடு கடந்த தொழிற்துறை வளர்ச்சிக்கும், தெற்காசிய விரிவாக்கத்திற்கும் தேவையான மின்னாற்றலை விரிவுபடுத்த அணு உலை சார் ஆற்றலை விரிவுபடுத்துகிறார்கள். இந்திய அரசு 40க்கும் மேற்பட்ட அணு உலைகளை நிறுவுவதோடு, ரிலையன்ஸ், டாட்டா போன்ற தனியார் முதலை களும் அணு ஆற்றல் உற்பத்தியில் இறங்கப் போகிறார்கள். தெற்காசியா முழுவதும் மின் கோபுரங்களை நிறுவி ஆற்றல் சந்தையை கட்டுப்படுத்த போகிறார்கள் என்ற விவரங்கள் இனிமேலும் வெறும் கருத்துக்களாக இருக்கப் போவதில்லை மாறாக, மக்களை துரத்தி வேட்டையாடும் கொள்கைகளாக மாறப் போகின்றன.

 

எனவே எதிர்வரும் நெருக்கடிகளை எதிர் கொள்ள மீனவர்கள், சூழலியல், வெறும் மின்வெட்டு விழிப்புணர்வு, பிறமொழிக்காரன் சதி, அகிம்சை, குடிமைச் சமூகம் என பம்மாத்து காட்டாமல், இந்திய பெருமுதலாளிய, ஏகாதி பத்திய கொள்கைகளை அம்பலப்படுத்துவதும், இவைகளுக்கு தீர்வாக தேச வளங்களை காக்கும் சுயசார்பு வளர்ச்சி மாதிரிகளை முன்வைப்பதும், இவற்றை நடைமுறைப்படுத்த முதலில் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை  கருத்தியலாக முன்னெடுப்பது அவசியமானதும், நேர்மையான அரசியல் கடமையுமாகும்.

— நன்றி தேசிய முன்னணி இதழ்

 

 

 

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் – பொதுக்கூட்டம், 26-05-2012 சனி கிழமை மாலை 6மணி. எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில்.

முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

வீழ்ந்த தமிழினம் வீற்கொண்டெழவே

பொதுக்கூட்டம்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நிறைவுற்ற இறுதிக்கட்ட போரில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பச்சிளங்குழந்தைகள் சிதைக்கப்பட்டனர். உலகத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளும், இரசாயண குண்டுகளும் வீசப்பட்டுநம் சொந்தங்கள் கொன்று குவிக்கப்பட்டனர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஈழ மக்களின் விடுதலைக்காக நச்சுக் குப்பி கழுத்தில் கட்டிக் கொண்டு உலகத்திற்கே போரியல் முன்னோடிகளாக விணங்கிய புலிகள் அழித்தொழிக்கப்பட்டதாக சிங்கள பேரினவாத அரசால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் ஆதரவோடும், இந்திய அரசின் நேரடி பங்கேற்ப்போடும், நடைபெற்ற் இப்போரை தடுத்துநிறுத்துவதற்கு உலக அளவில் புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் செய்தோம். பட்டினி கிடந்தோம். பல்வேறு போராட்டங்களை நடத்தினோம், இதன் உச்சக்கட்டமாக ஈகி முத்துகுமார் உள்ளிட்ட 17 பேர் தீக்கிரையாகி மாண்டு போயினர். உணர்ச்சி மயமான இப்போராட்டத்தை கிஞ்சித்தும் மதிக்காமல்போரை தொடர்ந்து நடத்தி ஈழ மக்களை கொன்று குவிக்கத் துணை நின்றது இந்திய அரசு.

மூன்றாண்டுகள் கடந்த பின்னே இந்த போரில் நமக்கு கிடைத்த படிப்பினைகள் என்ன? நாம் கற்று கொண்டது என்ன?, போர் நடந்து கொண்டிருந்தபோது, அதனை அதனை நிறுத்துவதற்காக போராடினோம். புறத்தோற்றத்திற்கு தமிழகமே கொதித்தெழுந்தது போல் தோன்றினாலும், இந்திய இந்திய அரசை பணிய வைக்கும் அளவிற்கான போராட்டம் நம்மிடம் எழவில்லை என்பதே உண்மை. முத்துகுமார் உள்ளிட்ட 17பேர் தீக்குளித்து மாண்டுபோன பின்பும் கூட போராட்டத்தை வலுவாக கட்டியமைக்கூடிய அமைப்பியல் வலிமை நம்மிடம் இல்லை.

ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கும், நம் சொந்தங்களை கொன்றழிப்பதற்கும் காரணமான இந்திய ஆசின் ஏகதிபத்திய கூட்டும், விரிவாதிக்க கொள்கையும், வல்லரசு கனவும், இங்குள்ள தேசிய இனங்களையும் சிறைப்படுத்தித்தான் வைத்திருக்கிறது. காஷ்மீர், நாகா, அசாம் என்று இந்திய துணைக்கணத்தினுள் தத்தம்முடைய தேசிய விடுதலை போராட்டத்தை அர்ப்பணிப்புடன் நடத்தி வருகிறார்கள்.

இச்சிறையினில் தமிழகமும் அகப்பட்டு தன்னுடைய அனைத்து சனநாயக உரிமைகளையும் பலி கொடுத்து நசுக்கப்பட்டு வருகிறது. 1964இல் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அயல்மொழி திணிப்புக்கு எதிராக போராடினோம். நம்முடைய தேசிய சனாயக உரிமையான மொழி உரிமையைக் காப்பதற்காகப் போராடிய நம்மில் 600க்கும் மேற்பட்டவர்கள் இந்திய அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனடர். இன்று நம் தேச வளத்தை காப்பதற்காகவும், நம் தேச மக்களின் வாழ்வை காப்பதற்காகவும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அணிதிரண்டு போராடி வரும் சாமானிய மீனவ மக்களுக்கு எதிராக இந்திய அரசு துணை இராணுவ படையை இறக்கி துப்பாக்கு முனையில் முற்றுகையிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் நம்முடைய நியாயமான உரிமைகளை மீட்டுத் தராமல் வஞ்சித்த்து இந்திய அரசு. பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகிய மூவரையும் தூக்கிலிட்டே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்றது இந்திய பார்ப்பனிய அரசு. தமிழ் நாட்டு மீனவர்கள் 550க்கு, மேற்பட்டவர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் அதை எதிர்த்து வாய் திறக்காமல் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக பேசியது.

இந்திய அரசின் தொடர்ச்சியானசனநாயக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நம்முடைய போராட்டம் எத்துணை வலிமையாக இருந்தது என்பது இங்கு நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வியாக உள்ளது. ஈழப் போரை தடுத்து நிறுத்த இயலாதது மட்டுமல்ல, தமிழகத்தில் நடைபெறும் சனநாயகத்திற்கான போராட்டமான கூடங்குளம் போராட்டத்திலும் அம்மக்கள் இந்திய அரசால் முற்றுகையிட்ட போதும், மூன்று தமிழ் உயிர் மீடு போராட்டத்தையும் தமிழகம் தழுவிய போராட்டமாக வடிவமைத்து இந்திய அரசை எதிர் கொள்ள நாம் தேசிய கருத்தியலையும் அமைப்பியல் வலுவையும் கட்டியமைக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.

முள்ளிவாய்க்காலுக்கு முன் ஈழத்தில் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் வலிமையான விடுதலைப் புலிகள் இயக்கம், தன் மக்களைக் காத்து தம் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து சென்றது. அச்சமயம் தமிழகத்தில் நாம் ஓர் ஆதரவு சக்தியாகவே இருந்து வந்தோம். முள்ளிவாய்க்காலுக்கு பின் களத்தில் இயக்கம் இல்லாத சூழலில் தமிழீழ விடுதலையின் பின்புலமாக தோளோடு தோள் கொடுத்துவிடுதலையை வென்றாக வேண்டிய பொறுப்பு தமிழத்திற்க்குத்தான் இருந்தாக வேண்டும்.

தமிழீழ விடுதலைக்கு சிங்கள பேரினவாத அரசை எதிர்கொள்வது மட்டுமல்ல, இந்திய அரசின் விவாதிக்க கொள்கைக்கு எதிராகவும் போராடியாக வேண்டும். தமிழீழத்தை வெல்வதற்கும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்க்கும் இந்திய ஆதிக்கத்தை முறியடித்தாக வேண்டும்.

தன்னிலை உணர்ந்த தமிழ்நாடு,  இதன் விடுதலைக்கு நீ போராடு!

அமைப்பாய் அணி திரள்வோம், இந்திய ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவோம்!.

நாள்: 26-05-2012 சனி கிழமை மாலை 6மணி.

இடம்: எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் அருகில்.

தலைமை : தோழர் அருன்சோரி

வரவேற்புரை: தோழர் ஆகாச முத்து

வீரவணக்க உரை:

      தோழர் தியாகு (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)

     தோழர் கி.வெங்கட்ராமன் (தமிழ் தேச பொதுவுடைமை கட்சி)

     தோழர் தமிழ் நேயன் (தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்)

     தோழர் சிவப்பிரகாசம் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்)

     தோழர் ஆனூர் செகதீசன் (பெரியார் திராவிடர் கழகம்)

     தோழர் மல்லை சத்யா (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்)

     தோழர் வன்னி அரசு (விடுதலை சிறுத்தைகள் கட்சி)

     தோழர் எஸ்.எஸ்.ஆரூன்ரசீ (தமிநாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்)

     தோழர் எழிலன் (தமிழ் தேச மாணவர் இயக்கம்)

நன்றியுரை: தோழர் மணிகண்டன்

தமிழக இளைஞர் எழுச்சி பாசறை – 9994262666

Posted in பகுக்கப்படாதது | 1 Comment

திருச்சி மத்திய சிறையில் உண்ணாநிலை போராட்டம்

திருச்சி மத்திய சிறையில் உண்ணாநிலை போராட்டம்

Image | Posted on by | Leave a comment

பேராசான் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்

பேராசான் கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்

Image | Posted on by | Leave a comment

குடந்தையில் சுவரொட்டி

குடந்தையில் சுவரொட்டி

Image | Posted on by | 1 Comment